ஒற்றுமை இல்லாததால் காங்., நிர்வாகிகள் மாற்றம்
கோவை; கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் பகவதி ஆகியோர், அவரவர் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை மாநகர் மாவட்ட தலைவராக விஜயகுமார், வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் நியமிக்கப்பட்டு உள்ளனர். கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்ட காங்கிரசை பொறுத்தவரை, நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை. மூன்று கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். தனித்தனியாக கூட்டம் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் என, தொடர்ந்து முரண்பாடாக செயல்பட்டு வந்தனர். காங்கிரஸ் மேலிடத்துக்கு தொடர்ந்து புகார் சென்றதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.