உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை வழித்தடத்தில் கன்டெய்னர் ரேஷன் கடை தினமலர் செய்தி எதிரொலி

யானை வழித்தடத்தில் கன்டெய்னர் ரேஷன் கடை தினமலர் செய்தி எதிரொலி

வால்பாறை: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறையில் நான்கு இடங்களில் கன்டெய்னர் ரேஷன் கடைகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 15,250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 43 ரேஷன் கடை வாயிலாக, அத்தியாவசியப்பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.இந்நிலையில், வால்பாறை நகரை தவிர, பிற எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தையும், யானைகள் அடிக்கடி சேதப்படுத்துவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது.இதனால், வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட்களில், மாதம் தோறும் திறந்த வெளியில் தான் ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், வால்பாறையில் நான்கு ரேஷன் கடைகள் கன்டெய்னர் கடைகளாக மாற்றும் பணி நடக்கிறது.வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறியதாவது:வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், யானைகள் வழித்தடத்தில் ரேஷன் கடைகள் அமைந்துள்ளன. இதனால், அடிக்கடி யானைகள் கடைகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.யானைகளிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்கும் வகையில், வால்பாறையில் ஏற்கனவே தாய்முடி, முத்துமுடி ஆகிய இரண்டு எஸ்டேட் பகுதியிலும், கன்டெய்னர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கலெக்டர், சப்-கலெக்டர் ஆகியோரின் உத்தரவு படி, அய்யர்பாடி ரோப்வே, பன்னிமேடு, ஆனைமுடி, சின்கோனா ரயான் டிவிஷன் ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் கன்டெய்னர் கடைகளாக மாற்றும் பணி தற்போது நடக்கிறது.இந்த கடைகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மீதமுள்ள கடைகளும் கண்டெய்னர் கடைகளாக மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை