உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடரும் குழாய் உடைப்பு வறண்ட அத்திக்கடவு குளங்கள்

தொடரும் குழாய் உடைப்பு வறண்ட அத்திக்கடவு குளங்கள்

அன்னுார் : பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அத்திக்கடவு குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளன.அத்திக்கடவு-அவிநாசி திட்டம், 1,913 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் இந்தத் திட்டத்தில் நீர் நிரப்பப்படுகிறது.இரு மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். ஆனால் அன்னுார் வட்டாரத்தில் பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குட்டைகளுக்கு நீர் செல்லாமல் குட்டைகள் வறண்டு போய் காணப்படுகின்றன.இதுகுறித்து குருக்களையம் பாளையம் மக்கள் கூறுகையில், 'மேகிணறு பிரிவிலிருந்து, மேகிணறு செல்லும் வழியில், அத்திக்கடவு குழாய் உடைந்து பல வாரங்கள் ஆகிவிட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வராமல் காய்ந்து போய் உள்ளன,' என்றனர். இதேபோல், சொக்கம்பாளையத்தில் உள்ள குளத்தின் வடக்கு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல வாரங்கள் ஆகிவிட்டது. அதிலிருந்து வெளியாகும் நீர் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று பயிர்களை அழுக வைக்கிறது. பெரிய புத்துாரில் ஐந்து குட்டைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பெரிய புத்துாரில் அன்னுார் சாலையில் குழாய் உடைப்பால் குட்டைக்கு செல்ல வேண்டிய நீர் சாலையோர பள்ளத்தில் செல்கிறது.இதுகுறித்து புகார் தெரிவித்து இரு வாரங்களுக்கு முன் உடைப்பை சரி செய்தனர். ஆனால் மீண்டும் நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.அத்திக்கடவு திட்ட அதிகாரிகள் அன்னுார் வட்டாரத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து உடைப்பு ஏற்பட்டுள்ள குழாய்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்தால், அத்திக்கடவு நீர் சாலையோரத்தில் வீணாவது தவிர்க்கப்பட்டு குளம் குட்டைகள் நிரம்பும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !