பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்ய வேண்டும்
கோவை:தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம், அரசு மருத்துவமனை எதிரே பொறியாளர் இல்லத்தில் நடந்தது. மாநில தலைவர் அமிர்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர், பண்ணை பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் மதிப்பூதியம், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி பெறுகின்றனர். பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு அலுவலர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை, தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். அனைத்து துறைகளிலும், 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உதவியாளராக பணிபுரிவோருக்கு, கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 33 அம்ச கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.