உயிரை பறித்த இருமல் மருந்து கோவையில் சப்ளை இல்லை
கோவை: தமிழகம் முழுவதும் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து விற்பனை, வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் இம்மருந்து சப்ளை செய்யப்படவில்லை என, மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, இம்மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து, மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது. இம்மருந்து சேலம், திருவண்ணாமலை, சென்னை, தஞ்சாவூர் ஆகிய சில மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியதால், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், ''காஞ்சிபுரம் பகுதியில் இம்மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இம்மருந்து விற்பனை, வினியோகத்தை தடை செய்துள்ளனர். கோவை, திருப்பூர், நீலகிரி பகுதிகளில் இம்மருந்து சப்ளை செய்யப்படவில்லை. பெற்றோர் அச்சம் கொள்ள தேவையில்லை, '' என்றார்.