| ADDED : ஜன 26, 2024 12:57 AM
பாலக்காடு;பாலக்காடு, மலம்புழா பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண, குடும்பத்துடன் மக்கள் வருவதால், கூட்டம் அலைமோதுகிறது.கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பூங்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் மற்றும் மலம்புழா நீர்ப்பாசன துறை இணைந்து, மலர் கண்காட்சி நடத்துகிறது. நடப்பாண்டு மலர் கண்காட்சி கடந்த 23ம் தேதி துவங்கியது. இந்த நிலையில், மலர் கண்காட்சியைக் காண, மக்கள் குடும்பத்துடன் வருவதால் கூட்டம் அலைமோதுகிறது.கடந்த மூன்று நாட்களில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலர் கண்காட்சியை காண பூங்காவுக்கு வந்துள்ளனர். கண்காட்சியை முன்னிட்டு, அங்கு நடக்கும் கலைநிகழ்ச்சிகளும், உணவுக்கண்காட்சியும் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து வருகின்றன. காலை, 8:00 மணி முதல் இரவு, 8.30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய்; 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கண்காட்சியை ஒட்டி வண்ண மின்விளக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 28ம் தேதி கண்காட்சி நிறைவு பெறுகிறது.