இனியும் வேண்டாம் வெட்டுக்குத்து; ரவுடிகளை போலீஸ் பின்தொடருது
கோவை : சிறையில் இருந்து வெளிவந்த ரவுடிகள், தொடர் கண்காணிப்பில் இருப்பதால், கோவையில் ரவுடிகளின் அட்டகாசம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு கோவையில் ரவுடிகள், இரு பிரிவுகளாக பிரிந்து வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து, கொலை சம்பவங்கள் நடந்தன.உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ரவுடிகள், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர். கோவை ராம்நகர், வடவள்ளி உள்ள பகுதிகளில் வெட்டுக்குத்து சம்பவங்கள் அரங்கேறின.இதையடுத்து, கோவை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த போலீசார் களத்தில் இறங்கினர். குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், ரவுடிகளை தேடி பிடித்து சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக ரவுடிகளின் அட்டகாசம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறையில் இருந்து ஜாமினில் வெளிவரும் ரவுடிகள், தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். சிறையில் இருக்கும் ரவுடிகளை பார்க்க, வரும் அவர்களது நண்பர்கள், உறவினர்களும் கண்காணிக்கப்படுகின்றனர்.அவர்கள் முறையாக சட்டத்தை பின்பற்றாவிட்டால், ஜாமின் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ஜாமினில் வெளிவந்து, தலைமறைவாகும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படுகிறது.சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சுமார், 600 பேர் கண்காணிப்பில் உள்ளனர். சிறை சென்று திரும்பும் பல குற்றவாளிகள் வேலை, குடும்பம் என வெளியூர்களுக்குச் சென்று விடுகின்றனர். கோவையில் இருப்பவர்கள், போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.தற்போது, கோவை மாநகரில் 'ஏ' பிளஸ் ரவுடிகள் 14 பேர் உள்ளனர். அதில் 10 பேர் சிறையில் உள்ளனர். நான்கு பேர் வெளியில் உள்ளனர்.வெளியில் உள்ளவர்களை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாரத்தில் ஒரு முறை அவர்களை நேரில் சந்தித்து, நடவடிக்கைகள் கேட்டறியப்படுகின்றன. இதனால், கோவை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசமும், எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார். தற்போது, கோவை மாநகரில் 'ஏ' பிளஸ் ரவுடிகள் 14 பேர் உள்ளனர். அதில் 10 பேர் சிறையில் உள்ளனர். நான்கு பேர் வெளியில் உள்ளனர். வெளியில் உள்ளவர்களை, போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாரத்தில் ஒரு முறை அவர்களை நேரில் சந்தித்து, நடவடிக்கைகள் கேட்டறியப்படுகின்றன. இதனால், கோவை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசமும், எண்ணிக்கையும் குறைந்துள்ளது.