சட்டவிரோதமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு; எட்டு பேர் கைது
வடவள்ளி: கோவையில், சட்டவிரோதமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தை, உயிரிழந்த விவகாரத்தில், 8 பேரை, வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர், 26 வயது பெண். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணமாகவில்லை. இந்நிலையில், இளம்பெண் கர்ப்பமடைந்தார்.நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண், பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம், 5ம் தேதி, பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகாமலே, குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால், அவமானம் என இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் கருதினர்.இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றிய வெங்கடேஸ்வரி, இளம்பெண்ணிடம், தனக்கு தெரிந்த தம்பதிக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. அவர்களுக்கு தத்துக்கொடுங்கள் எனக்கூறியுள்ளார்.இளம்பெண்ணும் சம்மதித்து, வெங்கடேஸ்வரியிடம் குழந்தையை கொடுத்து விட்டு, ஊருக்கு சென்றுவிட்டார். அப்போது, அங்கிருந்த கிராம நர்ஸ், இளம்பெண்ணிடம் குழந்தை எங்கே என கேட்டபோது, குழந்தையை சட்டவிரோதமாக தத்து கொடுத்தது தெரியவந்தது.நர்ஸ், குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குழந்தையை பெற்று சென்ற வெங்கடேஸ்வரி மீது, குழந்தைகள் உதவி மையத்தினர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர். போலீசார், வெங்கடேஸ்வரியிடம் விசாரணை செய்தனர். கைகள் மாறிய கைக்குழந்தை
வெங்கடேஸ்வரி, குழந்தையை, நண்பரான சார்லஸ் மற்றும் செல்வராணி தம்பதியினரிடம் கொடுத்ததும், தம்பதியினர், திருப்பத்தூரை சேர்ந்த அருண் என்பவரிடம் கொடுத்ததும், அவர், சங்கர் மற்றும் சிவசக்தி தம்பதிக்கு கொடுத்ததும் தெரியவந்தது.இதனையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். தாயின் அரவணைப்பு இல்லாமல், தாய்ப்பால் கிடைக்காமல், ஊர் விட்டு ஊர் மாறி, பல்வேறு கைகளுக்கு மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை, சில நாட்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.வடவள்ளி போலீசார், குழந்தையின் தாய், அவரது ஆண் நண்பர், வெங்கடேஸ்வரி, அருண், சார்லஸ், செல்வராணி, சங்கர் சிவசக்தி ஆகிய எட்டு பேர் மீது, வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.தாயின் அரவணைப்பு இல்லாமல், தாய்ப்பால் கிடைக்காமல், ஊர் விட்டு ஊர் மாறி, பல்வேறு கைகளுக்கு மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை, சில நாட்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.