உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப் பன்றிகள் பிரச்னைக்கு கிராமங்களில் கூட்டம் நடத்த முடிவு

காட்டுப் பன்றிகள் பிரச்னைக்கு கிராமங்களில் கூட்டம் நடத்த முடிவு

மேட்டுப்பாளையம்: -: காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு, வனத்துறை தீர்வு காண தவறினால், கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தி, காட்டு பன்றிகளை கொல்ல வேண்டும் என, பிரசாரம் செய்ய, தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் சங்க கூட்டம், கெம்மாரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலை வேம்பு விநாயகர் கோவில் திடலில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். ஊர் கவுடர் ராமசாமி முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ராஜேந்திரன், காரமடை அரங்கநாதர் உழவர் உற்பத்தி குழு தலைவர் முத்துசாமி, கூரனூர் விஜயன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாநிலத் தலைவர் வேணுகோபால் பேசியதாவது: வனத்திலிருந்து வெளியே வருகின்ற காட்டுப்பன்றிகள், விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை அழித்து சேதம் செய்து வருகின்றன. பன்றிகளை விரட்டும் மனிதர்களை தாக்குவது, சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் பிரசாத், காட்டுப் பன்றிகளை கொன்று, அதன் இறைச்சியை மக்கள் சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று பேசியதற்கு, தமிழக விவசாயிகள் சங்கம் பாராட்டும், வாழ்த்தும், தெரிவிக்கிறது. முன்னொரு காலத்தில் மன்னரும், மக்களும் வன விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்துள்ளனர். தற்போது காட்டு பன்றிகளை, மக்கள் வேட்டையாடி இறைச்சியை சாப்பிட்டால், வனத்துறையினர் அவர்களை கைது செய்து, அபராதம் விதிக்கின்றனர். இனி இந்த செயல் அனுமதிக்க கூடாது. விவசாய பயிர்களை, பன்றிகள் அழித்து சேதம் செய்வதால், விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை கொன்றாலும், சாப்பிட்டாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதையும் மீறி வனத்துறை மக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், கிராமமே ஒன்று திரண்டு முறியடிப்போம். இது சம்பந்தமாக ஒவ்வொரு கிராமங்களிலும், தமிழக விவசாயிகள் சங்கம் கூட்டங்கள் நடத்தி, விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யானைகள், சிறுத்தைகள், மான்கள், மயில், குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் பிரச்னைக்கு, முக்கிய காரணமாக இருக்கும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை, விவசாயத்தையும் மக்களையும் பாதுகாக்கும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு மாநில தலைவர் பேசினார். கூட்டத்தில் கெம்மாரம்பாளையம், சாலை வேம்பு உள்ளிட்ட சுற்று பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை