உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்டில் சிதிலமடைந்த கட்டடம் இடிப்பு; நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

பஸ் ஸ்டாண்டில் சிதிலமடைந்த கட்டடம் இடிப்பு; நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிதிலமடைந்த கான்கிரீட் கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த, 1985ம் ஆண்டு பழைய பஸ் ஸ்டாண்ட், 2009ல் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழநி, திருப்பூர், கோவை உள்ளிட்ட வழித்தடங்களுக்கான பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 31 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்தாண்டு, திருப்பூர் பஸ்கள் நிறுத்தும் 'ரேக்' பகுதியில், பயணியர் நிழற்கூரை சிதிலமடைந்து காணப்பட்டதால், அவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் செயல்பட்டு வந்த ஓட்டல் ஒன்றில், மேற்கூரை கான்கிரீட்டும் பெயர்ந்து விழுந்தது. இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், கடைகளை மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. கடைகள் அனைத்தும் காலியாக்கப்பட்ட நிலையில், பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அந்த வழித்தடம் மூடப்பட்டது. அவ்வழியாக வெளியேறும் பஸ்கள் அருகிலுள்ள மற்றொரு வழித்தடத்தில் வெளியேறின. பழைய பஸ் ஸ்டாண்டில் மூடப்பட்ட பகுதிகளில் இருந்த சிதிலமடைந்த கட்டடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்டவும், பயணியருக்கான நிழற்கூரை, இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென, நகராட்சி நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று, சிதிலடைந்த அனைத்து கான்கிரீட் கடைகளையும் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி