காரமடை நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
மேட்டுப்பாளையம் : காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட தெருகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால், அபேட் மருந்து ஊற்றுகின்றனர். மேலும், டயர், தேங்காய், மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர்.மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கும் வண்ணம் இருந்தால், அல்லது குடிநீர் தொட்டி திறந்து இருந்தால், அதிலிருந்து கொசு புழுக்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தால் அதனை கண்டறிந்து அதனை அழித்தும், கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.