உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் சங்கம், அனுமதிக்குமா தமிழக அரசு? முதல்வர், டி.ஜி.பி.,க்கு மனு

போலீஸ் சங்கம், அனுமதிக்குமா தமிழக அரசு? முதல்வர், டி.ஜி.பி.,க்கு மனு

கோவை : 'தமிழகம் ஒளிபெற குடும்ப ஆட்சியை ஒழித்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்' என, புகழாரம் சூட்டி மனு அனுப்பியுள்ள போலீசார், 'காவலர் சங்கம்' அமைக்க அனுமதி கோரியுள்ளனர். தமிழக போலீசில் 'காவலர் சங்கம்' அமைக்க போலீசாரில் சிலர் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். சங்கம் அமைக்க அனுமதி கோரி போலீசார் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டனர். மனுவை விசாரித்த ஐகோர்ட், மாநில அரசை அணுகுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கடந்த ஆட்சியின் போது முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க முயன்றனர்; அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சங்கம் அமைக்கும் முயற்சியை மீண்டும் கையிலெடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர், உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோருக்கு போலீசார் அனுப்பியுள்ள மனு: குடும்ப ஆட்சியை ஒழித்து, தமிழகத்தை ஒளிமயமாக்க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நீடிக்கவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், எங்களால் இயன்ற அளவு கடமை உணர்வுடன் பணியாற்றி, அரசுக்கு நற்பெயரை தேடித்தருவோம். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் காவலர்துறையினர் சங்கம் அமைத்து பணியாற்றுகின்றனர். அதே போன்று, தமிழகத்திலும் சங்கம் அமைக்க அனுமதி கோருகிறோம். நாங்கள் சங்கம் அமைப்பது தமிழக அரசுக்கோ அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்கோ எதிரானது அல்ல. நாங்கள் அரசின் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்கவும், எங்களது குறைந்தபட்ச கோரிக்கைளை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவுமே சங்கம் கோருகிறோம். தமிழகத்தில் காவலர்களுக்கு பணி நேரம் வரையறுக்கப்படவில்லை. தினமும் குறைந்தது 18 மணி நேரமும், அதற்கு மேலும் பணியாற்றுகிறோம். முறையான ஓய்வும், விடுப்பும் கிடைப்பதில்லை. அதனால் எங்கள் குடும்பத்துடன் எந்தவிதமான விசேஷ காரியங்களிலும் பங்கேற்க முடிவதில்லை. மனைவி, குழந்தைகளுடன் கூடி பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. எனவே, தினமும் எட்டு மணி நேரம் வேலை என்று பணி நேரத்தை நிர்ணயிக்க வேண்டுகிறோம். காவல்துறையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். உடன்பட மறுத்தால் கேவலமாகவும், இழிவாகவும் நடத்தி மிரட்டுகின்றனர். எனவே, தனித்தன்மையுடன் காவல்துறை செயலாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்களுக்கு வழங்கப்படும் ஊதியம், தினப்படி மற்றும் அலவன்ஸ் தொகைகளை அதிகரிக்க வேண்டும். காவல் துறையில் பணியாற்றுவோருக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றன. எனவே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காவல்துறையினருக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களை கைது செய்யும்போதும், கைது செய்த பிறகும் காவல்துறையினருக்கே உரிய பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. காவலர்களும், அவர்களது குடும்பத்தினரும் கொலை மிரட்டலுக்கு உள்ளாகின்றனர். இதைதடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து, காவலர் சங்கம் அமைப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி