| ADDED : டிச 23, 2025 05:18 AM
மேட்டுப்பாளையம்: புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டியுள்ள விடுதிகளுக்கு, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுமார் 9 ஆயிரம் எக்டர் பரப்பில் அமைந்துள்ளது.ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளன. இவற்றுக்கு மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில், இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அதிக ஒலி, ஒளி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது. பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடிக்க கூடாது. அதிக அளவில் கூட்டம் சேர்த்து, வாகன நெரிசல் ஏற்படுத்தி, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடாது. தீ ஆபத்து விளைவிக்கும், எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. மது அருந்திவிட்டு நள்ளிரவில் வனச்சாலைகளில் வாகனம் ஓட்டக்கூடாது. வனவிலங்குகள் தென்பட்டால், சொந்த முயற்சியில் விரட்ட முயற்சிக்கக் கூடாது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.