வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கழிவு நீர் மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது... நிறைய ஆராய்ச்சிகள தேவை..
கோவை; 'கழிவு நீரை சுத்திகரித்து, சின்னவேடம்பட்டி குளத்தில் தேக்கும் திட்டத்தை, கோவை மாநகராட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்கிற கோரிக்கையை, கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.கோவையில் சேகரமாகும் கழிவு நீரை சுத்திகரித்த பின், இரண்டாம் முறையாக மீண்டும் ஒரு முறை சுத்திகரித்து, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வழங்கவும், சின்னவேடம்பட்டி குளத்தில் தேக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர். இவ்வமைப்பு நிறுவனர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர்.அப்போது, 'தேர்தல் பிரச்சாரத்தின்போது, பவானி ஆற்றில் இருந்து சின்ன வேடம்பட்டி குளத்துக்கு நன்னீர் கொண்டு வரப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார் என்பதை அமைப்பினர் சுட்டிக்காட்டினர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மனு கொடுத்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கோவையில் நன்னீர் நிரப்பும் சாத்தியக்கூறு உள்ள ஒரே ஒரு ஒரு குளமாக வடக்கு பகுதியில் சின்னவேடம்பட்டி குளம் மட்டுமே உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கணுவாய் முதல் சின்னவேடம்பட்டி, கணபதி, பீளமேடு வரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை காக்க, வெள்ள நீர் வடிகாலாகவும், நீர்த்தேக்கமாகவும் சின்னவேடம்பட்டி குளம் இருக்கிறது. அவிநாசி - அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தில் சின்னவேடம்பட்டி சேர்க்கப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்படும் கழிவு நீரில் உள்ள ரசாயணங்கள் மற்றும் கடினத்தன்மையால், இப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும்; விவசாயத்தில் உயர்ந்த மரங்களுக்கு மட்டுமே சுத்திகரித்த கழிவு நீரை பயன்படுத்த முடியும். சுத்திகரித்த கழிவுநீரை ஓரிடத்தில் பெருமளவில் தேக்கினால், மண்ணின் தன்மையும், நிலத்தடி நீரின் தன்மையும் மிகப்பெரும் அளவில் மாசடையும். நகரை ஒட்டியுள்ள விவசாய விளைநிலங்கள் பெருமளவில் பாதிக்கும். மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆழ்துளை கிணறுகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. மாநகராட்சியின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. சின்னவேடம்பட்டியில் சுத்திகரித்த கழிவு நீர் தேக்குவதை தவிர்த்து நல்ல தண்ணீர் கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.
கழிவு நீர் மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது... நிறைய ஆராய்ச்சிகள தேவை..