உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தமிழக - கேரளா எல்லையில் வசிப்போருக்கு இரட்டை ஓட்டுரிமை: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

 தமிழக - கேரளா எல்லையில் வசிப்போருக்கு இரட்டை ஓட்டுரிமை: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

பொள்ளாச்சி: 'தமிழக - கேரளா எல்லையில் வசிப்போருக்கு இரண்டு ஓட்டுக்கள் உள்ளன. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்,' என, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம், எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம் மற்றும் நிர்வாகிகள், சப் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், பொள்ளாச்சி சட்டசபை தொகுதி ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாகம் எண், 176ல் மொத்தம், 762 விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டன. அதில், 600 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மீதம் உள்ள படிவங்களில் கடந்த, 20 ஆண்டகளாக நிரந்தரமாக வெளியூரில் வேறு சட்டசபை தொகுதிகளில் வசிக்கும், 75 வாக்காளர்கள், நேரில் வராமலேயே மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து, வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த, 75 வாக்காளர்களும், 176வது பூத்தில் வசிப்பதற்கான எவ்வித முகவரியும் இல்லை. எனவே, இது குறித்து முழுமையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர். நிருபர்களிடம் எம்.எல்.ஏ. கூறியதாவது: பொள்ளாச்சி தொகுதியில், தமிழக - கேரளா எல்லையில் வசிப்போருக்கு இரு ஓட்டுக்கள் உள்ளன. தமிழகம், கேரளாவில் ஓட்டுரிமை உள்ளதால் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதை சரி செய்ய வேண்டும். அதற்கு, 'சப் - கலெக்டர் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் நீக்கம் செய்ய சாப்ட்வேர் உள்ளது. இருமாநிலத்திலும் உள்ளதை நீக்க சாப்ட்வேர் இல்லை,' என தெரிவித்தார். எனினும், இது குறித்து ஆய்வு செய்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பி.ஏ.பி. திட்ட கால்வாய்கள் துார்வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை முறையாக பயன்படுத்தி கால்வாய்களை துார்வாரிய பின், தண்ணீர் திறந்துவிட வேண்டும். தற்போது மழை பெய்து ஈரப்பதம் உள்ளதால், கால்வாய்கள் முழுமையாக துார்வார வேண்டும். இதை சப் - கலெக்டர் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி