வால்பாறைக்கு இ - பாஸ் அரசுக்கு வலியுறுத்தல்
வால்பாறை; நீலகிரி, கொடைக்கானலை போன்று வால்பாறைக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என கொ.ம.தே.க., கோரிக்கை விடுத்துள்ளது.கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் வால்பாறை நகரச்செயலாளர் அன்பழகன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா நகரமான அங்கு 'பார்க்கிங்' வசதி இல்லாததால் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடமில்லாத நிலை காணப்படுகிறது.வாகனங்களை ரோட்டில் நிறுத்தி விட்டுச்செல்வதால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், ஆம்புலென்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு, பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.மேலும் வால்பாறையில் அனுமதி பெறாமல் செயல்படும் தங்கும் விடுதிகள் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலாபயணியர் வருகையால், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அவர்கள் வனப்பகுதியில் வீசி செல்வதால், வன விலங்குகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, வால்பாறையில் சுற்றுலா பயணியர் வருகையால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி, கொடைக்கானலை போன்று, கோவை மாவட்டம் வால்பாறையிலும் இ - பாஸ் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.