தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை!
அன்னூர்; 'தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை' என, ஓய்வூதியர்கள் சங்க மாநாட்டில், புகார் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தாலுகா அளவிலான மாநாடு அன்னூரில் நடந்தது. கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி அறிக்கை வாசித்தார். சங்கத்தின் மாவட்ட தலைவர் மதன் பேசுகையில், 'சட்டசபை தேர்தலின்போது, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனினும், நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை' என்றார். கூட்டத்தில், 'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு உறுதி அளித்தபடி குறைந்தபட்ச பென்ஷன் தொகை, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து வகை நோய்களுக்கும் நிபந்தனை இல்லாத, இலவச மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க நிர்வாகி கோவிந்தசாமி, ஓய்வூதியர் சங்கத் துணைத் தலைவர் தாமோதர்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் இளவரசு பங்கேற்றனர்.