உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலுக்குள் புகுந்த யானை: பக்தர்கள் அலறியபடி ஓட்டம்

கோவிலுக்குள் புகுந்த யானை: பக்தர்கள் அலறியபடி ஓட்டம்

தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அதைப்பார்த்த பக்தர்கள், அலறி ஓடினர். கோவை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில், அடர் வனப்பகுதியில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, உணவு தேடி, கோவில் வளாகத்துக்குள் வந்த ஒற்றை காட்டு யானை, திடீரென மூலவர் சன்னதிக்குள் நுழைந்தது. பக்தர்கள் அலறி ஓடினர். யானை புகுந்ததால் முன்பக்க இரும்பு கேட் உடைந்தது. யானை யாரையும் தாக்காமல், உணவை தேடிக்கொண்டிருந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பின், அறநிலையத்துறையினர் மற்றும் வனத்துறையினர் கூட்டாக, ஆலோசனை கூட்டம் நடத்தினர். காட்டு யானை வருவதை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்தனர். போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் கோபாலகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் கூறுகையில், ''வனப்பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் காட்டு யானை, சன்னதிக்குள் வராமல் தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும். கோவில் வளாகத்தைச் சுற்றிலும், 2.5 கோடி ரூபாயில், 10 அடி உயர தடுப்புச்சுவர் மற்றும் சோலார் மின் வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ