ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள்; விபத்து ஏற்படும் அபாயம்
ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சி ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இவ்வழியாக செல்லும் பைக் ஓட்டுனர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது. எனவே, இந்த ரோட்டை நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைக்க வேண்டும். -- டேனியல், பொள்ளாச்சி. தொட்டியில் துர்நாற்றம்
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, பயன்படுத்தாத தொட்டியில் தண்ணீர் தேக்கமடைந்து பல நாட்களாகி இருப்பதால், துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனித்து தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.-- ராஜ், கிணத்துக்கடவு. கழிவுநீர் தேக்கம்
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி அருகே, செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலத்தின் வடிகாலில், அதிக அளவு கழிவு நீர் தேக்கம் அடைந்திருப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை, ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, கழிவுநீர் தேங்காதவாறு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.- தினேஷ், பொள்ளாச்சி. துார்வார வேண்டும்
உடுமலை நேதாஜி மைதானத்தில் உள்ள மழை நீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குப்பை, கூளங்கள், அடைத்துக்கொள்கிறது. மழைநீர் தேங்குகிறது. எனவே, வடிகாலை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கதிரவன், உடுமலை. தடுப்பு அமைக்கணும்!
கிணத்துக்கடவில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் சர்வீஸ் ரோட்டில், தனியார் பங்க் அருகே சிறிய பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் செல்லும் போது தடுமாறுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இங்கு தடுப்பு அமைக்க வேண்டும்.-- மோகன், கிணத்துக்கடவு. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை திறந்த வெளிக்கழிப்பிடமாகவே மாற்றியுள்ளனர். அப்பள்ளி மாணவர்கள் மிகுதியான துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தொடர்ந்து அவ்விடம் கழிப்பிடமாக மாற்றப்பட்டு வருவதால், பள்ளி வளாகமும் துர்நாற்றம் வீச துவங்கிவிட்டது. மாணவர்களும் முகம் சுழிக்கின்றனர்.- ராகவன், உடுமலை. போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறை மீறி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை நேரங்களில் தொடர்ந்து தளிரோடு சிக்னல் முதல் குட்டைதிடல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கும் முடியாமல் சிக்கலான நிலை தொடர்கிறது.- விஜயன், உடுமலை. வாகனங்கள் ஆக்கிரமிப்பு
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டின் ஓரம் லாரிகள், கார்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, உடுமலை. சுகாதாரம் இல்லை
உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாய் திறந்தவெளிக்கழிப்பிடமாக உள்ளது. அப்பகுதி வழியாக கடந்து செல்லவும் முடியாத நிலையில் அசுத்தமாக உள்ளது. இதில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ரேஷன் பொருட்கள் பெற வரும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.- ராமகிருஷ்ணன், உடுமலை. பள்ளி முன் குப்பை
உடுமலை, சத்திரம் வீதியில் குப்பைக்கழிவுகள் அரசு பள்ளியின் முன் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதும் இல்லை. இதனால் தெருநாய்கள் அப்பகுதியில் கூட்டமாக கழிவுகளை இழுத்து பரப்புகின்றன. அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- ரவி, உடுமலை. ரோடு ஆக்கிரமிப்பு
வால்பாறை நகரில், ரோட்டோர கடை வைத்திருக்கும் சிலர், ரோட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், ரோட்டோரத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்யவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- மணிமாறன், வால்பாறை.