ஈரோடு அரசு கலைக் கல்லுாரி கபடி போட்டியில் சாம்பியன்
கோவை, - கல்லுாரிகளுக்கு இடையேயான ஆண்கள் கபடி போட்டியில் ஈரோடு அரசு கலைக் கல்லுாரி அணி 'லீக்' போட்டியில் மூன்று அணிகளையும் வீழ்த்தி 'சாம்பியன்' பெற்றது.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபடி போட்டி பல்கலை உள்விளையாட்டு அரங்கில் கடந்த இரு நாட்கள் நடந்தது. எட்டு கல்லுாரி அணிகள் இப்போட்டியில் பங்கேற்ற நிலையில், 'நாக்-அவுட்' முறையை அடுத்து 'லீக்' சுற்றில் நான்கு அணிகள் விளையாடின.முதல் போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி, 48-33 என்ற புள்ளி கணக்கில் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து, ஈரோடு அரசு கலைக் கல்லுாரி அணி, 36-21 என்ற புள்ளி கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியையும், டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணி, 39-31 என்ற புள்ளி கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியையும் வென்றது.ஈரோடு அரசு கலைக் கல்லுாரி அணி, 43-31 என்ற புள்ளி கணக்கில் ரத்தினம் கல்லுாரி அணியையும், ரத்தினம் கல்லுாரி அணி, 47-45 என்ற புள்ளி கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியையும், ஈரோடு அரசு கலைக் கல்லுாரி அணி, 34-18 என்ற புள்ளி கணக்கில் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணியையும் வென்றன.போட்டிகளின் நிறைவில், ஈரோடு அரசு கலைக் கல்லுாரி அணி முதலிடத்தையும், ரத்தினம் கல்லுாரி அணி இரண்டாம் இடத்தையும், டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணி மூன்றாம் இடத்தையும், கே.பி.ஆர்., கல்லுாரி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை உதவி இயக்குனர் வள்ளிமுருகன், உடற்கல்வி இயக்குனர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.