காக்க எல்லோரும் வரணும் ஓரணியில்!
சு ற்றுச்சூழல் அமைப்பில், பறவைகளின் பங்களிப்பு முக்கியமானது. உணவு சங்கிலி மற்றும் உணவு வலையின் முக்கிய அங்கமாக செயல்படுகின்றன. சில அரிய இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றில் முக்கியமானது, 'கானமயில்' (கிரேட் இந்தியன் பஸ்டர்ட்). சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியரும், வனவிலங்கு பாதுகாப்பு உயிரியலாளருமான அசோக் சக்ரவர்த்தி கூறியதாவது: கானமயில் என்பது, இந்தியாவில் மிக அரிதாக காணப்படும் பறவையினங்களில் ஒன்று. தமிழ் சங்க இலக்கியங்களில் கூட, அவ்வையார் கானமயிலைப் பற்றி பாடியிருப்பது, இதன் பழமையான வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஒருகாலத்தில் திருச்சி, கோவை, சூலூர், நீலகிரி, சேலம், மதுரை, திண்டுக்கல், பழனி, சிவகங்கை, அருப்புக்கோட்டை, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில், கானமயில் வாழ்ந்ததாக பதிவுகள் கூறுகின்றன. 1972ல் விமானி பிரதாப் ஷெட்டி கூட, விமான தளத்தில் இரண்டு கானமயிலை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது, இந்த பறவை ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியாவில் சுமார் 150 கானமயில் மட்டுமே மீதமுள்ளது. இதனால், ராஜஸ்தானில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாலைவன தேசியப் பூங்கா மற்றும் ராம்தேவ்ரா கிரேட் இந்தியன் பஸ்டர்ட் பாதுகாப்பு மையத்தில், இனப்பெருக்க திட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதுபோன்று, தமிழ்நாட்டிலும் திருச்சிக்கு அருகே உள்ள குமுளூர், கண்ணாக்குடி, புள்ளம்பாடி, சங்கேந்தி போன்ற இடங்களில், இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். உணவுச்சங்கிலியின் முக்கியத்துவம் உணர்ந்து, இந்த பறவையினத்தை பாதுகாக்க அரசும், பொதுமக்களும் முன்வர வேண்டும். இவ்வாறு, அசோக் சக்ரவர்த்தி கூறினார். கானமயில் என்பது, இந்தியாவில் மிக அரிதாக காணப்படும் பறவையினங்களில் ஒன்று. தமிழ் சங்க இலக்கியங்களில் கூட, அவ்வையார் கானமயிலைப் பற்றி பாடியிருப்பது, இதன் பழமையான வரலாற்றை வெளிப்படுத்துகிறது.
ஆங்கில பெயரால்
போனதே வாய்ப்பு!
இந்தியாவின் தேசிய பறவையாக எதை அறிவிக்கலாம் என்ற விவாதத்தின் போது, பறவையியல் பிதாமகன் சலீம் அலி, கானமயிலை பரிந்துரைத்தார். ஆனால் ஆங்கிலத்தில் 'பஸ்டர்ட்' (Bustard) என்ற பெயர் தவறாக உச்சரிக்கப்படலாம் என்ற காரணத்தால், அந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. இப்போது, கானமயில் மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க, விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.