பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்; மாணவ, மாணவியர் உற்சாகம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் நேற்று துவங்கப்பட்டது. தமிழகத்தில், 'முதல்வரின் காலை உணவு திட்டம்' 2022 செப். 15ல் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட குப்பாண்டகவுண்டர் பள்ளியில் காலை உணவு திட்டம் நேற்று துவங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி ஆகியோர் திட்டத்தை துவக்கி வைத்தனர். நகாட்சி துணை தலைவர் கவுதமன், நகராட்சி நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 13 பள்ளிகள், நகராட்சி எல்லை அருகே அமைந்துள்ள எட்டு பள்ளிகள், என, மொத்தம், 21 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு உத்தரவின்படி, நகராட்சியில் மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, மூன்று பள்ளிகளில் பயிலும், 582 மாணவர்கள் பயன்பெறுவர்,' என்றனர். வால்பாறை வால்பாறை மலைப்பகுதியில், 17 அரசு நிதியுதவி பெறும் துவக்கபள்ளிகள், 3 நடுநிலைப்பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தபட்டது. இத்திட்டத்தில், 408 மாணவர்கள் புதிதாக பயனடைகின்றனர். அரசு உதவி பெறும் துாய இருதய ஆரம்ப பள்ளியில் நடந்த காலை உணவு வழங்கும் திட்ட துவக்கவிழாவுக்கு, பள்ளி தாளாளர் ரெஜினாமேரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அன்பரசி வரவேற்றார். விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பேசும் போது, ''முதல்வர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, இந்தியாவில் பிற மாநிலங்களும் கடைபிடிக்கின்றன. ''இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் படித்துள்ளனர். அரசு வழங்கும் திட்டங்கள் வாயிலாக பயன்பெறும் மாணவர்கள் நன்றாக படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,'' என்றார். விழாவில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் கணேசன், வட்டார கல்வி அலுவலர் திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று காலை உணவு திட்டம் துவங்கியது. இதில், கிணத்துக்கடவு டி.இ.எல்.சி., அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் சிங்கராம்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி என இரு பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று துவங்கியது. கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்பாபு மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.