கிடப்பில் போடாது பணிகளை வேகப்படுத்த எதிர்பார்ப்பு
கோவை; ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு மண் பரிசோதனை பணிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பணிகளை வேகப்படுத்த வீரர்கள், ரசிகர்களிடம் கோரிக்கை வலுத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு 'டெண்டர்' கோரியது.மேலும், 20 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் உள்ள பகுதியை கண்டறியும் பணி நடந்தது. ஒண்டிப்புதுாரில் தற்போது திறந்தவெளி சிறை மைதானம் தேர்வு செய்யப்பட்டு, மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கடந்தாண்டு ஜூன் மாதம் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.அந்த இடமானது விளையாட்டு துறைக்கு வகை மாற்றமும் செய்யப்பட்டது. கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் சட்டசபையில் உதயநிதி அறிவித்திருந்தார். கடந்தாண்டு இறுதியில் மண் பரிசோதனையும் செய்யப்பட்டது.அதேசமயம், 'ஸ்டேடியம் மாடல்' இறுதி செய்யப்படாததுடன், நிதி ஒதுக்கீடு செய்து இதுவரை அரசாணையும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், திட்டத்தை கிடப்பில் போடாமல் பணிகளை வேகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. மண் பரிசோதனை 'ஓவர்'
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில்,'மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அளவீடு பணிகளை முடித்து சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்படும். இதையடுத்து, வீரர்கள் தங்கும் அறை, கேலரி, பயிற்சி மையம், அவசர சிகிச்சை அறை உள்ளிட்டவை அடங்கிய வரைபடம் தயார் செய்து, 'ஸ்டேடியம் மாடல்' இறுதிசெய்யப்பட்டவுடன் அதை கட்டமைக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும்' என்றனர். அறிவிப்பு எதிர்பார்ப்பு!
ஆர்.எஸ்., புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.9 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக உதயநிதி விரைவில் கோவை வரவுள்ளார். அப்போது, சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி 'பார்க்கிங்'
மைதானம் அடுத்து இருக்கும் பை-பாஸ் ரோட்டின் அருகேயே மூன்று ஏக்கரில் பார்க்கிங் வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து ரசிகர்கள் வந்துசெல்ல ஏதுவாக கிரிக்கெட் மைதானம் அருகே வரை தனியே பாலம் அமைக்கவும் பரிசீலித்துவருவதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.