உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சம்பள பேச்சு வார்த்தை தோல்வி; தோட்ட தொழிலாளர்கள் கவலை

சம்பள பேச்சு வார்த்தை தோல்வி; தோட்ட தொழிலாளர்கள் கவலை

வால்பாறை; புதிய சம்பள பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் முதல் புதிய சம்பளம் வழங்க வேண்டும். இந்நிலையில், புதிய சம்பளம் வழங்குவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தை கோவையில் நடந்தது. தனியார் தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தின் சார்பில், உட்பிரியார் குரூப் துணைத்தலைவர் பாலசந்திரன், பாரிஆக்ரோ துணைத்தலைவர் முரளிபடிக்கல், தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்க செயலாளர் பிரதீப்குமார், டாடா காபி முதுநிலை பொதுமேலாளர் அச்சையா, வாட்டர்பால்ஸ் பொதுமேலாளர் விக்ரம், ஜெயஸ்ரீ டீ எஸ்டேட் பொதுமேலாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கத்தின் சார்பில், அண்ணாதொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு தலைவர் அமீது, வினோத்குமார் (எல்.பி.எப்.), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.) கேசவமருகன் (வி.சி.) உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில், தொழிற்சங்க தலைவர்கள் பேசும் போது, 'தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக நீதிமன்ற வழக்கை காரணம் காட்டாமல், 2025 ஜூலை 1ம் தேதி முதல் தற்போது பெற்றுவரும் சம்பளத்தை விட, நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும்,' என்று வலியுறுத்தப்பட்டது. தோட்ட அதிபர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'நீலகிரி, வயநாடு பகுதியில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, 2025 ஜூலை 1 முதல், தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அங்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, அதை விட கூடுதலாக வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்க முடியாது,' என்றனர். இதற்கு தொழிற்சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பேச்சு வார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சம்பள பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை