மேட்டுப்பாளையம், பெத்திக்குட்டை, ஓதிமலை பகுதிகளில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்காமல், காலம் கடத்தி வரும், சிறுமுகை வனத்துறையை கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டை அருகே ஓதிமலை, ரங்கம்பாளையம், அய்யம்பாளையம், பெத்திக்குட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கறவை மாடுகள், ஆடுகள் வளர்த்தும், விவசாயத்தையும் மட்டுமே நம்பியுள்ளனர். இந்தப் பகுதிகளில் தற்போது சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை விவசாயிகள் பார்த்துள்ளனர். இது குறித்து பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: ஓதிமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில், விவசாயிகள், பொதுமக்கள் ஆடுகளை மேய்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெத்திக்குட்டை, அய்யம்பாளையம், ரங்கம்பாளையம் ஓதிமலை ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்து உள்ளனர். இப்பகுதியில் மான்கள் அதிகம் உள்ளதால், சிறுத்தைகள் நிரந்தரமாக மலைப்பகுதியில் தங்கி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் நான்கு ஆடுகள், ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் காணாமல் போயின. கடந்த வாரம் அய்யம்பாளையம் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, சிறுத்தை பிடித்து சென்றதை, ஆடு மேய்த்தவர்கள் பார்த்துள்ளனர். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். பெத்திக்குட்டை, ஓதிமலை அடிவாரத்தில் கூண்டுகள் வைத்து, சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து சிறுமுகை வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.