மானியத்தில் ஜிப்சம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அன்னுார்; 'மானியத்தில் ஜிப்சம் பெறலாம்,' என, விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்துள்ளது.அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை : அரசின் என்.ஏ.டி.பி., திட்டத்தின் கீழ், காரத்தன்மை அதிகம் உள்ள மண்ணை நடுநிலைக்கு கொண்டு வரும் பொருட்டு, ஜிப்சம் விநியோகிக்கப்படுகிறது.விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் பகுப்பாய்வு செய்து அறிக்கை பெற வேண்டும். அந்த அறிக்கையில் அமிலத்தன்மை 8.5க்கு மேல் இருக்கும் பட்சத்தில், மண்ணானது காரத்தன்மை அதிகம் உள்ள மண்ணாக கருதப்படுகிறது.எனவே, அந்த மண்ணை நடுநிலைக்கு கொண்டு வர, ஜிப்சம் இட பரிந்துரைக்கப்படுகிறது. ஜிப்சத்தை மானிய விலையில் பெற, விவசாயிகள் தங்கள் மண் பரிசோதனை அறிக்கையை கொண்டுவர வேண்டும். மண் பரிசோதனை முடிவு அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும், ஜிப்சம் மானிய விலையில் வழங்கப்படும். விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.