பொள்ளாச்சி:சென்னையில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தென்னை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. தென்னையிலிருந்து தேங்காய், கொப்பரை, தென்னை மட்டை போன்றவை கிடைக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவற்றை நிறைவேற்ற, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம், இந்திய தென்னை விவசாயிகள் நட்பமைப்புகூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வரும், 7ம் தேதி சென்னையில் நடக்கிறது.இதற்கான ஆலோசனைக்கூட்டம், பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை அரங்கில் நடந்தது. தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத்தலைவர் தாத்துார் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நட்பமைப்பு தலைவர் சக்திவேல், இணை செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தென்னை உற்பத்தியாளர் நட்பமைப்பு இணைச்செயலாளர் கூறியதாவது:தி.மு.க., அரசு கடந்த, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில், 66வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெயை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்கப்படும் என உறுதிபட தெரிவித்து இருந்தது. ஆனால், நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.பாமாயிலை தடை செய்து, தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என கடந்த, 30 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளும், விவசாய சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.கடந்த, 2019ல், 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் விலை தற்போது, 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, தமிழகத்தில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வினியோகிக்க வேண்டும். மலேசியா - இந்தோனிசியா பாமாயிலுக்கு பதிலாக, இவற்றை வழங்குவதால் விவசாயிகள் பயன்பெற முடியும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 7ம் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதில், தென்னை விவசாயிகள் பங்கேற்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் திரளாக அனைவரும் பங்கேற்பது என, முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.