எடைமேடை இன்றி அலைக்கழிப்பு; சரி செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
கோவை ; கோவை மதுக்கரை வட்டம், பிச்சனுாரில் உள்ள, சிறுவாணி உழவர்கள் உற்பத்தி குழுவில், இளநீர் பிராசசிங் யூனிட் செயல்படுகிறது. இங்கு, அரசு மானியத்தில் செயல்பட்டு வந்த எடை மேடை பழுந்தடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக எடை மேடை செயல்படாமல் இருப்பதால், விவசாயிகள் தங்கள் பொருட்களை எடை போடுவதற்கு நீண்ட தொலைவுக்கு எடுத்து செல்லவேண்டியுள்ளதாகவும், இதனால், இழப்பு ஏற்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மாநில விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''சிறுவாணி உழவர் உற்பத்தி குழுவில் எடை மேடை அரசு மானியத்தில் செயல்பட்டு வந்தது. விவசாயிகள் தங்களது விளை பொருட்களையும், இடுபொருட்களையும் எடை போடுவதற்கு எளிதாக இருந்தது. தற்போது இரண்டு முறை நீண்ட தொலைவு எடுத்து செல்லவேண்டியுள்ளது. இதுகுறித்து, புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் விவசாயிகள் நலன் கருதி இதனை சரிசெய்து தர முன்வரவேண்டும், '' என்றார்.