கோவை:கோவையிலுள்ள மத்திய அரசின் இந்திய உணவுக் கழக குடோன்களிலிருந்து, 9 மாவட்டங்களைச் சேர்ந்த 9,251 ரேஷன் கடைகளுக்கு உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன.இந்திய உணவுக் கழகத்தின் கோவை மண்டல மேலாளர் ஸ்ரீகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசின் இந்திய உணவுக்கழகத்தின் கோவை மண்டலத்துக்குச் சொந்தமாக 3 குடோன்கள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 650 மெட்ரிக் டன் உணவைப் பாதுகாக்கும் கொள்ளளவு கொண்டவை. இவற்றைத் தவிர்த்து, ஆறு வாடகை குடோன்களில், 76 ஆயிரத்து 504 மெட்ரிக் டன் உணவு தானியங்களைப் பாதுகாக்க முடியும்.உணவு விநியோகத் திட்டத்தைச் சீராகச் செயல்படுத்துவதற்கு, அதிகளவு உணவு உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து, குறைவான உற்பத்தியுள்ள மாநிலங்களுக்கு, ரயில்கள் மூலமாக உணவைக் கொண்டு வந்து சேமிப்பதை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது. கோவை மண்டலத்தில், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 6 குடோன்கள் செயல்படுகின்றன.இந்த நிதியாண்டில், 209 ரயில்களில், 5 லட்சத்து 82 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த குடோன்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5 நிலவரப்படி, கோவை மண்டலத்தின் மொத்த கொள்ளளவான 3 லட்சத்து 5 ஆயிரத்து 154 மெட்ரிக் டன் அளவில், 2 லட்சத்து 3 ஆயித்து 346 மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 543 மெட்ரிக் டன் அரிசியும், 43 ஆயிரத்து 803 மெட்ரிக் டன் கோதுமையும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த உணவு தானியங்கள், இங்கிருந்து தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் இயங்கும் 9,251 நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் வழியாக, மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.இவற்றைப் பாதுகாப்பதற்கு இந்த ஒன்பது மாவட்டங்களில் 61 குடோன்கள் உள்ளன. கடந்த 2023 ஜனவரியிலிருந்து, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு, அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில், இலவசமாக 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், 653 மெட்ரிக் டன் கோதுமையும் வழங்கப்படுகிறது.அதேபோல, முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு, 42 ஆயிரம் டன் அரிசியும், 1497 டன் கோதுமையும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பிரதமரின் போஷான் திட்டம், கோதுமை ஊட்டச்சத்து திட்டம் மற்றும் திறந்தவெளிச்சந்தை விற்பனைத் திட்டம் ஆகியவற்றுக்கும் உணவுக்கழகம், தேவையான தானியங்களை வழங்குகிறது. மின்னணு ஏலமுறையில் அடிப்படை விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.