பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி உரத்தேவையை சமாளிக்கலாம்
பெ.நா.பாளையம்: பசுந்தாள் உரங்களை இடுவதால், உரத்தேவையை சமாளிக்க முடியும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.சரியான அளவில் இயற்கை உரங்களை இடுவதால், மண்ணின் வளம், பயிர் உயர் விளைச்சல், தரமான சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாக்கப்படுகின்றன. இயற்கை உரங்களான தொழு உரம், கம்போஸ்ட், மண்புழு உரம் போன்றவை தேவையான அளவு அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, பசுந்தாள் உரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே உற்பத்தி செய்து, பயிருக்கு இடுவதன் வாயிலாக, பயிர்களின் உரத் தேவையினை சமாளிக்கலாம். பசுந்தாள் உரங்களால் தழைச்சத்து நிலைபடுத்தப்படுவதால், மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. இது எளிதில் மட்கும் தன்மை உடையது. மண்ணில் இடுவதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவிக்கிறது. மண்ணின் கட்டமைப்பையும் நன்றாக சீராக்குகிறது. இதன் வாயிலாக, மண்ணுக்கு அதிக அளவு நீரை தக்க வைத்துக் கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது. பயிறுக்கு தேவையான சத்துக்களை மண்ணின் அடிப்பாகத்தில் இருந்து மேல் பகுதிக்கு கொண்டு வருவதால், மண்ணின் வளம் நீடிக்க பயன்படுகிறது என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.