| ADDED : டிச 29, 2025 05:30 AM
மேட்டுப்பாளையம்: -: காரமடையில் உள்ள கேரள மாநில எல்லை பகுதியான கோபனாரி, முள்ளியில் 'பறவை' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. கேரளா மாநில வாகனங்களில் வரும் நபர்களுக்கு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இக்காய்ச்சல் மனிதர்கள் மற்றும் கோழிகளுக்கு பரவாமல் இருக்க, கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில், சுகாதாரத் துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, காரமடை அருகே உள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான கோபனாரி மற்றும் முள்ளியில், சுகாதாரத் துறை மருத்துவ குழுவினருடன் முகாமிட்டுள்ளனர். இவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். அப்படி இருந்தால்,அந்த காய்ச்சல் எத்தனை நாட்கள் உள்ளது, இருமல் உள்ளதா, தொண்டை வலி உள்ளதா எனவும் பரிசோதனை செய்கிறார்கள். காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன் கூறுகையில், காய்ச்சல் இருப்பின் அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் அருகில் உள்ள வெள்ளியங்காடு அல்லது சீலியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கேரளாவில் இருந்து இறைச்சி கொண்டு வரக்கூடாது. கொண்டு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது, என்றார். மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை வட்டாரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு, அங்கு காய்ச்சலுடன் வரும் நோயாளிகள் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றனர்.