உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வேகமாக சென்றால் அபராதம்

ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வேகமாக சென்றால் அபராதம்

கோவை: ''ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால், வழக்கு பதியப்படும். 30 கி.மீ.,வேகம்தான் பரிந்துரைக்கப்படுகிறது. அதை மீறி சென்றால் அபராதம் விதிக்கப்படும். அதிவேகம் கண்டறிய ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் கேமராக்கள் பொருத்தப்படும்,'' என்று போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறினார். அவர் கூறியதாவது: ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், உப்பிலிபாளையம் ரவுண்டானாவில், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்களுக்கு வாகனங்கள் செல்லும் வழிகள் தெரியவில்லை. பொதுமக்கள் பாலத்தை பார்வையிட ஆர்வம் காட்டுவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சிக்னல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சிக்னல்கள் அமைந்தவுடன் போக்குவரத்து நெரிசல் இருக்காது. பழைய மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் சிக்னல் அமைக்கப்பட்ட பின், நேரடியாக நீதிமன்ற ரோட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படும். இது மட்டுமின்றி, அவிநாசி ரோட்டில் வரும் வாகனங்கள் எம்.எல்.ஏ., அலுவலக ரோடு, ஹுசூர் ரோட்டில் திருப்பி விடப்பட்டு வந்தன. தற்போது அவற்றை நேரடியாக செல்ல அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிக்னல்கள் இயங்கினால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. பழைய மேம்பாலத்தில் இருந்து இறங்கி, நேராக அவிநாசி ரோடு செல்லும் வாகனங்கள் நிற்காமல் செல்ல சிக்னல் அமைக்கப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக, ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்யப்படுகிறது. சர்வீஸ் ரோட்டை விரிவுபடுத்தி தருவதாக தெரிவித்துள்ளனர். பாலத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால், வழக்கு பதியப்படும். அதை கண்டறிய ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். அதன் வாயிலாக வேக அளவு கணக்கிடப்படும். பாலத்தில், 30 கி.மீ., வேகம் தான் பரிந்துரைக்கப்படுகிறது. அதை மீறி சென்றால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !