உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாலையில் குப்பை கொட்டினால் அபராதம்; நகராட்சி எச்சரிக்கை

 சாலையில் குப்பை கொட்டினால் அபராதம்; நகராட்சி எச்சரிக்கை

வால்பாறை: சாலையில் கட்டடக்கழிவு மற்றும் குப்பைக்கழிவுகளை கொட்டினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், சமீபகாலமாக கட்டடக்கழிவுகள், குப்பை கொட்டப்படுகின்றன. குறிப்பாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அதிக அளவில் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை நகராட்சி கமிஷனர் குமரன், அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த பின் கூறியதாவது: வால்பாறை நகரை துாய்மையாக வைத்துக்கொள்ள, நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சாலையோரம் கட்டடக்கழிவுகளையும், குப்பைகளையும் வீசுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணியர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள வால்பாறை மலைப்பகுதியில், கண்ட இடங்களில் கழிவுகளை வீசக்கூடாது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி