உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வணிக வளாகத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

கோவை வணிக வளாகத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

கோவை:கோவையில், வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. கோவை, பெரிய கடைவீதியில் உள்ள, சிம்கோ எனும் வணிக நிறுவனத்தில் உள்ள கடையின் மேல் பகுதியில் இருந்து, நேற்று காலை 11:30 மணிக்கு கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து தீப்பிடித்தது. அக்கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். தகவலறிந்து சென்ற, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையிலான தெற்கு தீயணைப்பு துறை வீரர்கள், 60க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடினர். தீ கட்டுக்குள் வராமல் அதிகரித்தது. கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 'ஸ்கை வாக்' தீயணைப்பு வாகனம் உட்பட, 8 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டன. மாநகர போலீசாரின் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. தீ விபத்தால் பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி முழுதும் புகைமூட்டமாக இருந்தது. சுவாச கோளாறு ஏற்பட்டது. தீவிபத்து நடந்த வணிக வளாகத்தில், 90 கடைகள் உள்ளன. வணிக வளாகத்தின் மேல் மாடியில், கிடங்கு செயல்பட்டு வந்தது. அதில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. இதையடுத்து, காஸ் சிலிண்டர்கள் உட்பட எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்கும் மேல் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் பற்றி, உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர். கோவை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை