உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ள அபாய எச்சரிக்கை கருவி: ஆழியாறு கவியருவியில் அமைக்கணும்!

வெள்ள அபாய எச்சரிக்கை கருவி: ஆழியாறு கவியருவியில் அமைக்கணும்!

பொள்ளாச்சி: ஆழியாறு கவியருவில், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, வெள்ள அபாய எச்சரிக்கை கருவி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, ஆழியாறு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கவியருவி அமைந்துள்ளது. ஆழியாறு அணை, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணியர் பலர், கவியருவில் குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், கடந்த பிப்., மாதத்தில் இருந்து அருவிக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாததால், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மே மாதம் இறுதியில் பெய்த கனமழைக்கு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தடை நீட்டிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, அனுமதி மறுக்கப்பட்டாலும், தொலைதுாரத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைகின்றனர்.ஒவ்வொரு மழையின்போதும், திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் பாதிப்பு எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் வகையில், வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்த வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது: வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டால், குறிப்பிட்ட இடத்தில் பெய்யும் மழையின் அளவு, ஒவ்வொரு நேரத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு, வெள்ள அபாயம் அல்லது பேரிடர் குறித்த எச்சரிக்கை விபரம் அலுவலர்களின் மொபைல்போன் எண்ணை சென்றடையும்.அந்த தகவல், கட்டுப்பாட்டு அறையில் இருந்து இணைக்கப்பட்ட ஒலி பெருக்கி வாயிலாக தெரிவிக்கப்படும் போது, கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனக்குழுவினரும், சுற்றுலா பயணியரும் 'அலர்ட்' ஆகலாம்.இதற்காக, நிதி ஒதுக்கீடு செய்து, துறை ரீதியான அலுவலர்களுடன் ஒன்றிணைத்து, பணிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ