வால்பாறை;வால்பாறையில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். சமவெளிப்பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் குளுகுளு சீசன் நிலவுவதாலும், பகல் நேரத்திலேயே மேகமூட்டம் சூழ்ந்து ரம்யமாக காட்சியளிப்பதாலும், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.பல்வேறு பகுதியில் இருந்தும் வால்பாறை வந்துள்ள சுற்றுலா பயணியர் சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர்.இந்நிலையில், வால்பாறையில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ளது சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளிக்க, சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர். சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான கூழாங்கல் ஆற்றில் குளித்த போது, கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் இறந்துள்ளனர்.இதே போல், கடந்த ஆண்டு சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதையில் உள்ள நீர்ச்சூழலில் சிக்கி, 5 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து வால்பாறையில் உள்ள நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதித்து கோவை கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.இந்நிலையில், வால்பாறையில் பருவமழை தொடர்ந்து பெய்யும் நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனால், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதனிடையே, வால்பாறை நகராட்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு பிர்லா நீர்வழிப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.அதில், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, பிர்லா நீர்வழிப்பாதை உள்ளிட்ட ஆறுகள் மிகவும் அபாயகரமானது. மழை காலங்களில் இந்த ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், ஆறுகளில் இறங்குவது, குளிப்பது, துணி துவைப்பது, ஆற்றின் கரை பகுதியில் கால்நடைகளை மேய்ப்பது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணியர் குளிக்க முயன்றால், போலீசார் வாயிலாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும், என, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகம் உள்ளது. அதே நேரத்தில், சேடல்டேம் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என்றனர்.