பூ மார்க்கெட் கடை ஒதுக்கீடு வியாபாரிகள் ஆட்சேபனை
கோவை: கோவை பன்னீர்செல்வம் பூ மார்க்கெட்டில், 21 கடைகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கே ஒதுக்கீடு செய்ததற்கு, வியாபாரிகள் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர்.கோவை மாநகராட்சி, 72வது வார்டில் பன்னீர்செல்வம் பூ மார்க்கெட் செயல்படுகிறது. 'நமக்கு நாமே' திட்டத்தில், சமீபத்தில் இம்மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டது. 144 மேடை கடைகள், 28 நிரந்தர கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வளாகத்தில், 21 ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. அவ்விடத்தில், தற்போது இரு கூடாரம் அமைக்கப்பட்டு, தரைக்கடைகள் கட்டப்பட்டு இருக்கின்றன.இக்கடைகள் ஒதுக்கீடு செய்ய முதலில் ஏலம் கோரப்பட்டது; அதன்பின் ஏல நடைமுறை கைவிடப்பட்டு, மேயரிடம்முன்அனுமதி பெற்று, வரி விதிப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பழைய ஆக்கிரமிப்பாளர்களுக்கே மாதாந்திர வாடகை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அங்குள்ள வியாபாரிகளில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பூ மார்க்கெட் வழித்தடத்தில் தற்போது கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றுக்கு திட்ட அனுமதி பெறப்படவில்லை. வழித்தடத்தை மாநகராட்சியே ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருப்பதால் வாகனங்கள் உள்ளே சென்று சரக்குகளை ஏற்றி, இறக்க முடிவதில்லை.சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கில், தற்போது கடைகள் கட்டியுள்ள இடத்தை இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாநகராட்சி காட்டியிருக்கிறது. அவ்விடம் உண்மையில் வழித்தடமாகும். மாநகராட்சி செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். மார்க்கெட்டுக்கு தேவையான வழித்தடம், பொதுக்கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கடைகளை பொது ஏலம் விட்டு ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.