நாளைய வித்தைக்கு... இன்று ஒரு விதை! வேர் பிடிக்கும்; விழுதுகள் பரவும்
ஒரு பருக்கை சோறு...யானைக்கு சிறியதுஆனால்...எறும்புக்கு...!
இது போன்ற கேள்விகள் தான், கோவை மண்டல அறிவியல் மையம் தன்னிடம் வரும் மாணவ மாணவியரை, புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.இங்கு நடக்கும் எட்டு நாள் பயிற்சியில், பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. டெலஸ்கோப் ஒர்க்ஷாப், கேம் டெவலப்மென்ட் பிளாக் கோடிங் வாயிலாக, '3டி' மாடலிங் மற்றும் பிரிண்டிங், சயின்ஸ் கேம்ப், இவையெல்லாம் மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா போலவே இருக்கின்றன. இதில், குழந்தைகளின் கவனத்தை ஈர்த்த ஒன்று, போல்ட் ஸ்கோப்.இதுகுறித்து விரிவாக சொல்கிறார், மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) சுடலை.''வெறும் 8 கிராம் எடையுள்ள இந்த மைக்ரோஸ்கோப், மாணவர்களின் உள்ளங்கையிலேயே அறிவியல் கதவுகளைத் திறக்கிறது. ஏதேனும் ஒரு சிறு தாவரத் துண்டு, ஒரு துளி நீர், ஒரு கொசுவின் சினை, இவை எல்லாம் இனி பனிக்குடத்தில் மூடிய மர்மம் அல்ல. மாணவர்கள், இதை நேரில் காணலாம்; உணரலாம்; புரிந்து கொள்ளலாம்.முன்பெல்லாம் புத்தகத்தில் அமீபா வரைபடம் பார்த்து, அது இப்படித்தான் இருக்கும் என்று நம்பினோம். இப்போது, அதே அமீபாவை கண்களால் பார்த்து, அது எப்படி உடல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது என்பதை நேரில் காணும் போதே, இந்த பயிற்சியின் முக்கியத்துவம் புரியும்,'' என்றார்.பயிற்சி பெறும் மாணவி கிரிஷிகா கூறுகையில், ''எறும்பு எடுத்துச் செல்லும் வெள்ளை பொருள் உணவு என்று நினைத்திருந்தேன். ஆனால், அது எறும்பின் முட்டை என்பதை, இந்த போல்ட் ஸ்கோப் வாயிலாக பார்த்தது புது அனுபவம்,'' என்றார்.கண்டுபிடிப்புகள் எல்லாமே, மாற்று சிந்தனையில் உருவானது தானே!