உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுத்தீயை கண்டறியும் மொபைல் ஆப் தயார் நிலையில் வன ஊழியர்கள்

காட்டுத்தீயை கண்டறியும் மொபைல் ஆப் தயார் நிலையில் வன ஊழியர்கள்

பொள்ளாச்சி: இனிவரும் நாட்களில், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் காட்டு தீ பரவினால், அதனைக் கண்டறிந்து தடுக்க, 'பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா' என்ற மொபைல் ஆப் பயன்படுத்தப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ., பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது. வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, வேட்டை தடுப்பு காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இனிவரும் நாட்களில், வனத்தில் வறட்சியால் காட்டுத்தீ பரவும் சூழல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. புலிகள் காப்பகத்தில், ஆறு மீட்டர் அகலத்தில், பல நுாறு கி.மீ., துாரத்துக்கு, ஆங்காங்கே, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகின்றன.தீயை அணைக்க, தற்காலிக தீத்தடுப்பு காவலர்கள், நியமிக்கப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், எப்.எஸ்.ஐ., (பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா) என்ற ஆப் பயன்படுத்தி, காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.வனத்துறையினர் கூறியதாவது:இந்த 'மொபைல் ஆப்'பில், அனைத்து வன ஊழியர்களின் மொபைல்போன் எண் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஏதேனும் ஒரு பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால், 'சாட்டிலைட்' வாயிலாக கண்டறியப்பட்டு, அத்தகவல் குறுஞ்செய்தியாக, அப்பகுதி வன ஊழியர்கள் மற்றும் அலுவலர்களைச் சென்றடையும். அதன் வாயிலாக, தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஆங்காங்கே உள்ள சோதனைச் சாவடிகளில், சுற்றுலா பயணியர் சிகரெட் புகைப்பது, அணையாத தீக்குச்சி, புகையும் சிகரெட், பீடி துண்டுகளை வீசி எறிவதை தவிர்க்க விழிப்புணர்வு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை