உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 70 வயதில் இளமை திரும்பியது முன்னாள் மாணவர்கள் குஷி!

70 வயதில் இளமை திரும்பியது முன்னாள் மாணவர்கள் குஷி!

'ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன...தொலைத்த நட்புகளை மீண்டும் வளாகத்தில் கண்டபோது வெள்ளமென பெருக்கெடுத்தது பழைய நினைவுகள். அந்த நினைவுகள் எங்களை, 1970ம் ஆண்டுகளுக்கே கொண்டு சென்றுவிட்டது. 70 வயதை கடந்தும் எங்கள் கால்கள் துள்ளிக்குதித்தன. தடுமாறிய எங்கள் குரல், கம்பீரமாய் மாறியதை போல் உணர்ந்தோம்' - முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் சுவாரஸ்யத்தை, நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வேளாண் பல்கலை முன்னாள் மாணவன் சேரலாதன். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 1970-74ல் வேளாண் இளம் அறிவியல் படித்து பட்டம் பெற்ற, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, கடந்த இரண்டு நாட்களாக பல்கலையில் நடந்தது. பழமை மாறாமல் உள்ள அக்கட்டடத்தில், அவர்கள் படித்த வகுப்பறையிலேயே நிகழ்ச்சிகளையும் நடத்தி மகிழ்ந்தனர். 160 பேர் படித்த வகுப்பில், 100 பேர் இந்நிகழ்வில் பங்கேற்று, பழைய அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர். அந்த கால பாடல்களையும், படங்களையும் நடித்தும், ஆடியும் விளையாடினர். அனைவரும், பச்சை நிற சட்டையும், பட்டு வேட்டியும் அணிந்து, குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நிறைவு நாள் விழாவில், துணைவேந்தர் கீதாலட்சுமி பங்கேற்று, முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களின் சிறப்பான செயல்பாடுகளை கவுரவித்தார். ஒரு அறக்கட்டளை துவங்கி, மாணவர்களை ஊக்குவிக்க, முன்னாள் மாணவர்களில் ஒருவரான, யூனியன் வங்கி ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளர் தேவசுந்தரம், எட்டு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் ராமநாதன், ராமமூர்த்தி, சங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ