நான்கு வழிச்சாலை பணி அன்னுாரில் துவங்கியது
அன்னுார்: நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பேரூராட்சியிலும் துவங்கி நடைபெறுகிறது. அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னூர், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்க தமிழக அரசு 238 கோடி ரூபாய் ஒதுக்கியது. இப்பணி கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. கோவை மாவட்டத்தில், கஞ்சப்பள்ளி மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாக மையப்பகுதியில் இருந்து இருபுறமும் தலா 10 மீட்டருக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அன்னுார் பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் சாலை அமைக்கும் பணி துவங்கியது. சோமனுார் பிரிவில் துவங்கி நாகமாபுதுார் வரை சாலையின் வடக்கு பகுதியில் 10 மீ., அகலத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரிகள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அன்னுார் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அன்னுார் கைகாட்டி, அவிநாசி ரோடு, சத்தி ரோடு சந்திப்பு, சோமனுார் பிரிவு ஆகிய மூன்று இடங்களில் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மூன்று இடங்களில் ரவுண்டானா அமைக்க நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.