ஏழை குடும்பங்களுக்கு இலவச நீத்தார் சேவை
ஒரு ஏழையின் வீட்டில் ஏற்படும் மரணத்தால் அக்குடும்பம் நிலைகுலைந்து ஸ்தம்பித்து போகிறது. ஏற்கனவே செய்த மருத்துவ செலவுகள் ஒருபக்கம் இருக்க, மிக நேசித்த உறவு இறந்த சோகத்தில் செய்வதறியாது திகைத்து போவார்கள். அந்த சமயத்தில் உறவினர்களிடமும், நண்பர்களிடமும், பக்கத்து வீட்டிலும் பணம் கேட்க மனம் ஒப்பாது.அவ்வாறு தவிக்கின்ற ஏழை, நடுத்தர குடும்பங்களின் இல்லம் தேடி சென்று அவர்களுக்கு ஒரு உறவாய், அப்போதைய உடனடி தேவையான சாமியானா, டேபிள், சேர்கள், பிரீசர் பாக்ஸ், டீ பிளாஸ்க் போன்றவை கொடுத்து அவர்களின் துக்கத்தில் பங்கு கொள்ளும் பணியை செய்து வருகிறது கோவையில் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் இருந்து செயல்படும் தாய்மை அறக்கட்டளை.இறந்த வீட்டில் சாதி, மத வேறுபாடும் பார்க்காமல், சாமியானா கட்டுவது, சேர்கள் ஏற்றி இறக்குவது, மருத்துவ சான்றிதழ் பெற உதவுவது, சடங்கு செய்ய வேண்டி இருந்தால் குறிப்பிட்ட தொடர்பு எண்களை வழங்கி உதவுவது, பிரீசர் பாக்சில் உடலை கிடத்த உதவுவது, மவுன அஞ்சலி செலுத்துவது ஆக இத்தனையையும் இந்த அறக்கட்டளையானது குடும்ப சகிதமாய் குழந்தை, பெண்கள், ஆண்களுமாய் வந்து உளமாற சேவை செய்கிறார்கள்.இறந்த செய்தி கிடைத்தவுடன் இரவு, பகல் பாராமல் குடும்பத்தில் உள்ள உறவு இறந்தால் எப்படி ஒவ்வொருவரும் சொந்த வேலையை விட்டுவிட்டு ஓடுவோமோ, அதுபோல இவர்கள் இறந்த வீடு சென்று 'இலவச நீத்தார் சேவை' வழங்குகிறார்கள். இதில் ஆட்டோ வாடகைகூட இவர்கள் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இதுவரை, 1700க்கும் மேல் ஏழை குடும்பங்களுக்கு உதவியுள்ளனர். இந்த தாய்மை அறக்கட்டளையை சாரதா, மகேஸ்வரி ஆகியோர் அறங்காவலர்களாக இருந்தும் செயல்படுத்தி வருகின்றனர். சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் இறப்பு ஏற்பட்டால் 915 915 8155 என்ற எண்ணில் 24 மணிநேரமும் அழைக்கலாம் என ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தெரிவித்தார்.