வடக்கு செல்வபுரத்தில் சாலையின் இருபுறங்களிலும் குப்பை!
இரண்டாண்டுகளாக அவதி
கோவை 15வது வார்டு, ஜி.என்.மில்ஸ் எஸ்.எஸ்.கார்டன் இரண்டாவது கிராஸ் வீதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழை நேரங்களில் சிரமங்களை எதிர்கொள்கிறோம்.- ராஜன், ஜி.என்.மில்ஸ் சகதியில் சிக்கும் வாகனங்கள்
சிங்காநல்லுார் கிழக்கு மண்டலம், எழிர் நகரில் சாலை வசதி இல்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி செல்லும் சிறுவர்கள், பெற்றோருடன் செல்லும் போது, வாகனம் சகதியில் சிக்கி விபத்து ஏற்பட்டது. சாலை மட்டுமின்றி, தெரு விளக்குகளும் இன்றி கடும் சிரமப்படுகின்றோம்.- எழில்நகர் குடியிருப்போர் சங்கம். தெருவிளக்கு எரிவதில்லை
வடவள்ளி, வேம்பு அவென்யூ பிச்சிப்பூ வீதியில், 20 நாட்களாக தெரு விளக்கு எரிவதில்லை. மக்கள் அச்சத்துடன் சென்று வரும் சூழல் உள்ளது.- ரோஷினி, வடவள்ளி.* காந்திமாநகர் தீயணைப்பு துறை அலுவலக பின்புறம் தெரு விளக்கு, கடந்த பத்து நாட்களாக எரிவதில்லை.- ராஜலட்சுமி, காந்திமாநகர். சுகாதார சீர்கேடு
மாநகராட்சி, வார்டு எண் 27, பீளமேடு துரைசாமி லே அவுட் பகுதியில், தென்புறம் உள்ள கழிவு நீர் கால்வாயில், கடந்த ஆறு மாதங்களாக கழிவு நீர் செல்வதில்லை. கழிவு தேங்கி, கொசு அதிகமாகியுள்ளது. துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- வெங்கடபதி , பீளமேடு. குவிக்கப்படும் குப்பை
கோவை 78வது வார்டு, ஐ.யு.டி.பி., காலனி வடக்கு செல்வபுரத்தில் சாலையின் இருபுறங்களிலும், குப்பை குவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்களும் இதனை கண்டுகொள்வதில்லை.- ரமணா, செல்வபுரம் புதையும் வாகனங்கள்
வெள்ளக்கிணறு வார்டு 3, மீனாட்சி நகர் பகுதியில் வளர்ச்சி பணிக்காக, தோண்டப்பட்டு சாலை மோசமான சூழலில் உள்ளது. மழை சமயங்களில், வாகனங்கள் அனைத்தும் மண்ணில் புதைந்து விடுகின்றன. நடந்து செல்பவர்களும் விழுந்து எழ வேண்டியுள்ளது.- லாரன்ஸ், மீனாட்சி நகர். தேங்கும் கழிவுகள்
சிங்காநல்லுார், 61வது வார்டு போயர் எக்ஸ்டென்ஷன் வீதியில், சாக்கடை கடந்த பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படவில்லை. மழை நேரங்களில் அடைப்பு காரணமாக, பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாநகராட்சி மேயரிடம், இரண்டு முறை நேரடியாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- தனபால், சிங்காநல்லுார். ஆளை விழுங்கும் குழி
காமராஜர் சாலை, வார்டு எண் 59 இந்திரா கார்டன் செல்லும் வழியில், 14 அங்குல விட்டம் 6 அடி ஆழம் கொண்ட துளை, திறந்த நிலையில் உள்ளது. எதிர்புறம் காந்தி கிராமோதய பள்ளி இருப்பதால், குழந்தைகள் விழும் வாய்ப்புகள் அதிகம். உடனடியாக சரிசெய்ய வேண்டும்.- மகேந்திரன், ஸ்ரீனிவாச கார்டன். விழும் நிலையில் மரம்
மாநகராட்சி வடக்கு மண்டலம், 15வது வார்டு ஐ.டி.ஐ., பின்புறம் பாலசுப்பிரமணிய நகர் முதல் வீதி ஜங்ஷனில், மளிகை கடை அருகில் உள்ள மரம், எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடும் நிலையில் உள்ளது. மழைக்காலமாக உள்ளதால், காலம் தாழ்த்தாமல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சசிதரன், பாலசுப்பிரமணிய நகர்