சமைக்கும் போது காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு
கிணத்துக்கடவு: கோவை கிணத்துக்கடவு, மணிகண்டபுரத்தில் வீட்டில் சமைக்கும் போது காஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, மணிகண்டபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 53, பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி, 49. இவர் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டது. இதைக் கண்ட லோகேஸ்வரி, சுதாரித்துக் கொண்டு வெளியேறினார். தொடர்ந்து காஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் தீப்பிடித்து எரிந்து, அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், வீட்டிலிருந்த பிரிட்ஜ், 'டிவி', ஏசி உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் வீட்டில் இருந்த இதர பொருட்கள், ஜன்னல்கள் என அனைத்தும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள், தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். போலீசார், வீட்டில் சேதமடைந்த பகுதி மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.