அரசு பஸ் இயக்காத விவகாரம்; தெற்கு ஆர்.டி.ஓ. விசாரணை
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் பேரூராட்சி கெம்பனுார் கிராமத்தில், 3வது மற்றும் 4வது வார்டுகள் உள்ளன. 3வது வார்டில், கெம்பனுார் தெற்கு மற்றும் வடக்கு வீதி உள்ளது. 150 குடும்பங்கள் வசிக்கின்றன. குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே அதிகமாக உள்ளனர். 4வது வார்டில், அண்ணா நகர் வடக்கு, தெற்கு வீதி உள்ளது. இப்பகுதியில், அருந்ததியர் சமுதாய மக்கள், 200 குடும்பத்தினர் உள்ளனர். இக்கிராமத்துக்கு, 21, 21பி, 94ஏ, 64டி என்ற வழித்தடம் எண் கொண்ட 4 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 21 என்ற வழித்தடம் எண் கொண்ட அரசு பஸ் மட்டும், ஜாதி பாகுபாடு காரணமாக, தங்கள் பகுதிக்கு வராமல், கெம்பனுார் ஊருக்குள்ளேயே திரும்பிச் செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் நேற்று நேரில் சென்று, இருதரப்பு மக்களிடமும் விசாரணை நடத்தினார். 'தங்கள் பகுதிக்கு காலை 10 முதல் மாலை 3.30 மணி வரை பஸ்கள் வருவதில்லை. அந்த நேரத்திற்கு கட்டாயம் பஸ் இயக்க வேண்டும். 21 வழித்தட எண் பஸ் வரவில்லை என்றாலும், தாளியூர் பஸ்சை தங்கள் பகுதிக்கு இயக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரினர். இரு தரப்பினருக்கும் இடையே, சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தற்போது மீண்டும் பிரச்னைக்கு வழிவகுக்காமல், மாற்று ஏற்பாடாக, தாளியூரில் இருந்து, இப்பகுதிக்கு பஸ் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். அப்பகுதி மக்களும் சம்மதம் தெரிவித்தனர்.