-நமது நிருபர்-கோவை சுண்டக்காமுத்துார் குளக்கரையிலுள்ள ரோடு, ஏராளமான பள்ளம், மேடுகளுடன் இருப்பதால் தினமும் ஏராளமானோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட கோவைப்புதுாருக்கு, செல்வபுரம் மற்றும் பேரூர் ஆகிய பகுதிகளிலிருந்து, புட்டுவிக்கி மற்றும் சுண்டக்காமுத்துார் (பேரூர்) குளக்கரை வழியாக இரு பாதைகள் உள்ளன. இவ்விரு பாதைகளும் குளத்தின் அருகிலுள்ள சந்திப்புப் பகுதியில் இணைகின்றன. அங்கிருந்து, குனியமுத்துார் பிரிவு வரையிலுமான ரோடு, குளத்தின் கரையை ஒட்டி அமைந்துள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது தான், இந்த ரோடும், அதையொட்டி நடைபாதையும் போடப்பட்டது. புட்டுவிக்கி ரோடு-பேரூர் ரோடு சந்திப்புப் பகுதியிலிருந்து, குனியமுத்துார் ரோடு வரையிலுமான ரோட்டில், குளத்தை ஒட்டியுள்ள ரோடு, மிகமிக ஆபத்தான ரோடாக மாறியுள்ளது.குறிச்சி- குனியமுத்துார் பாதாள சாக்கடைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில் இந்த குளத்தின் கரையில் உள்ள ரோடு தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டன. அதிலிருந்து பல மாதங்களாக அந்த ரோடு, மேடு, பள்ளங்களுடன் புழுதிப்படலம் உள்ள ரோடாக இருந்தது. இதனால் வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.சமீபத்தில், அந்த பள்ளங்களை மூடி, ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பதிக்கப்பட்ட பள்ளங்களை ஒழுங்காக, மூடாமல் அவசர கதியில் ரோட்டைப் போட்டுள்ளனர்.இதனால் ரோட்டின் வாகனங்கள் செல்லச் செல்ல, அந்தப் பகுதியில் ரோடு பள்ளமாக இறங்கி விட்டது. இதனால், அனைத்து வாகனங்களும் தடுமாறுகின்றன. குறிப்பாக, தினமும் டூவீலரில் வருவோர் பலர் விபத்துக்குள்ளாகின்றனர். கார்களில் வந்தாலும், மேடும் பள்ளமுமான ரோடு, காரின் அடிப்பாகத்தை பதம் பார்த்து, பெரும் செலவை இழுத்து விடுகிறது. இந்த ரோட்டிலுள்ள பள்ளங்களையும், மேடுகளையும் சமப்படுத்தி, ஒரே சீரான முறையில் ரோட்டைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம். அத்துடன், அங்குள்ள நடைபாதை, தெரு விளக்குகள் அனைத்தையும் சீரமைத்து, காலை, மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் மக்கள் அங்கு அச்சமின்றி வந்து செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும் முக்கியம்.