கோவை : கோவை, பூசாரிபாளையம் ரோட்டில் உள்ள மசூரி அம்மன் கோவிலை அகற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.கோவை - பூசாரிபாளையம் ரோட்டில், குமாரசாமி காலனியில், சாலையோரத்தில் மசூரி அம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். தினமும் பூஜை நடக்கிறது; ஒவ்வொரு ஆண்டும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.இச்சாலையை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சமீபத்தில் அகலப்படுத்தி, புதிதாக தார் ரோடு போட்டனர். இவ்வழித்தடத்தில், சாலையின் ஓரத்தில் பல கோவில்கள் உள்ளன. இதில், மசூரி அம்மன் கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, மாநில நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. அவகாசம் நேற்றுடன் முடிந்ததால், கோவிலை இடிக்க, போலீசாருடன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்பகுதி மக்கள் அவகாசம் கோரியதால், கோவிலை இடிக்காமல் திரும்பிச் சென்றனர்.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'குமாரசாமி காலனியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக மசூரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு மாற்றிடம் தர மறுக்கின்றனர். பொதுமக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வரும் கோவிலை இடிக்க, முனைப்பு காட்டுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்' என்றனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சோழவழத்தான் கூறுகையில், 'பூசாரிபாளையம் ரோடு, 10 மீட்டர் அகலத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் வகையில், சாலையோர ஆக்கிரமிப்பாக கோவில் இருக்கிறது. அதனால், நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிர்வாகிகளே அகற்றிக் கொள்வதாக கூறியிருப்பதால், கோவிலை இடிக்கவில்லை,'' என்றார்.