மதுக்கரை மார்க்கெட் ரோட்டை புதுப்பிக்க ரூ.1 கோடி ஒதுக்கியது நெடுஞ்சாலைத்துறை
கோவை: சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் செல்லும் ரோட்டில் அபிராமி மருத்துவமனை வரை ரோடு படுமோசமாக காணப்படுகிறது. அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதேபோல், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாயிபாபா காலனியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, மேம்பாலம் கட்டும் பகுதியிலும், ரோட்டின் இருபுறமும் ரோடு பள்ளமாக காணப்பட்டது. மக்களை பாடாய்படுத்தும் இவ்விரண்டு பிரச்னைகள் தொடர்பாக, நமது நாளிதழில் நேற்று, படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் அழகர்ராஜன் ஆகியோர், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள குழிகளை நேரில் பார்வையிட்டனர். தற்காலிக ஏற்பாடாக, உடனடியாக 'வெட்மிக்ஸ்' கலவை கொட்டி, சமன் செய்யப்பட்டது. இதேபோல், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் 1.4 கி.மீ., துாரத்தில் உள்ள குழிகள் சமப்படுத்தப்பட்டன. இவ்விடங்களில், 27ம் தேதி தார் ரோடு போடப்படுகிறது. இதற்காக ஒரு கோடி ரூபாயை, மாநில நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கியுள்ளது. சாரதா மில் ரோட்டில்... இதேபோல், போத்தனுார் ரயில் கல்யாண மண்டபம் முன்பிருந்து, பொள்ளாச்சி ரோடு வரை சாரதா மில் ரோட்டில், 1.6 கி.மீ. துாரத்துக்கு சீரமைக்க, 2.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தையும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகளை துவக்க அறிவுறுத்தினர். மேட்டுப்பாளையம் ரோட்டில், மேம்பாலப் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தினர், குழிகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெட்மிக்ஸ் நிரப்பி, தற்காலிகமாக சமன் செய்துள்ளனர்.