ரூபாய் நோட்டுகளால் தூய்மை பணியாளர் கவுரவிப்பு
அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில், 120 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நிரந்தர தூய்மை பணியாளராக, 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த முருகன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.இதையடுத்து, பேரூராட்சி அலுவலக வளாகத்தில், பாராட்டு விழா நடந்தது. விழாவில் ரூபாய் நோட்டுக்களால் கிரீடமும், ரூபாய் நோட்டுக்களால் மாலையும் செய்து முருகனுக்கு அணிவித்து கவுரவித்தனர். இதன் பிறகு பேரூராட்சி தலைவரின் வாகனத்தில் முருகனின் வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், வார்டு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராசாத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.