| ADDED : நவ 22, 2025 07:44 AM
பொள்ளாச்சி: ''எனது உடலில் மூச்சு உள்ளவரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்,'' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் தி.மு.க.,வில் இணையப்போவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க. இயக்கம் துவங்குவதற்கு முன், எம்.ஜி.ஆர். கை பிடித்து வளர்ந்தவன் நான். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுடன் பயணித்தவன். தற்போது, பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் அணிவகுத்து நிற்கும் தொண்டராக உள்ளேன். எனது உடலில் மூச்சு உள்ளவரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன். வீண் வதந்திகளை பரப்பி குழப்பம் ஏற்படுத்த பார்க்கின்றனர். அவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தருவேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றால், அ.தி.மு.க.வில் இணைய மனு போட்டால், பொதுச்செயலாளர் பழனிசாமி பரிசீலனை செய்வார். தேர்தல் வந்தாலே தி.மு.க. என்மீது ஏதாவது அபாண்டமான பழியை பரப்புவர். தற்போது, இதுபோன்ற வதந்தியை பரப்பியுள்ளனர். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.